ஷங்கர் இயக்கவுள்ள தமிழ் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் மற்றும் இலியானா ஆகியோர் நடிக்க, இம்மாதம் ஆம் 5 ஆம் தேதி டேராடூனில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தார்கள்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா ஆகியோருடன் தெலுங்கு '3 இடியட்ஸ்' நாயகனான மகேஷ்பாபுவும் கலந்துகொள்வார் என கூறப்பட்டது.
கிட்டதட்ட பதினொரு நாட்கள் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லாமே திட்டமிட்டபடிதான் நடந்தது. ஆனால், இறுதி கட்டத்தில் விஜய் இப்படத்திலிருந்து விலகி இருக்கிறார். அதனால், இப்படத்தின் படப்படிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் இருப்பதாலும், ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் போன்ற விஷயங்களில் அதிருப்தி அடைந்ததாலும் அவர் விலகி இருக்கிறாராம்.
வேலாயுதம் முடியாத நிலையில், ஸ்டைலை மாற்றிக் கொண்டால் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் விஜய் விலக முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, விஜய் நடிக்கவிருந்த அமீர் கான் கதாப்பாத்திரத்துக்கு சூர்யாவை ஷங்கர் தேர்வு செய்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதை உறுதிபடுத்தும் விதமாக ஷங்கரும் சூர்யாவும் திங்கட்கிழமை மாலை சந்திக்க இருக்கிறார்கள்.
ஆனால், சூர்யா நடித்து வரும் ஏழாம் அறிவு படத்தின் படப்பிடிப்பு 60% தான் முடிந்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு பதில் சூர்யா நடிக்கிறாரா என்பது இன்று நடைபெற போகும் சந்திப்பில் முடிவாகும்.
3 இடியட்ஸ்சில் இருந்து விஜய் விலகுவதற்கு சில பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மைப் பின்னணி தொடர்பாக கேள்வி எழாமலில்லை.