Wednesday, 3 November 2010

Sudharsan SR

சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இணைகிறார்களா?

 

இந்திய சினிமா வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என பெயரெடுத்திருப்பது 'எந்திரன்' திரைப்படம். ஷங்கரின் இயக்கத்தில் கலாநிதி மாறன் 160 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'எந்திரன்' திரைப்படம்.
உலகளாவிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலாநிதி மாறன் அடுத்த படத் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அடுத்தப் படத்திற்கு கலாநிதி மாறன் ஒதுக்கியிருக்கும் தொகை 500 கோடி இந்திய ரூபாய். அதாவது இலங்கை மதிப்பில் 1,250 கோடி ரூபாய்..!

இவ்வளவு செலவில் உருவாகும் படத்தினை இயக்கவிருப்பவரும் இயக்குநர் ஷங்கர்தான். 500 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் இணையவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமல்ஹாசனும் இப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு திரையில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம். ரஜினி-கமல் கூட்டணியில் அக்காலத்தில் வெளிவந்த படங்கள் சக்கைபோடு போட்டதை யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். மீண்டும் அவர்களை ஒன்றிணைய வைப்பதென்பது எல்லா இயக்குநர்களுக்கும் கனவாகவே இருந்தது. அந்த கனவினை நிஜமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.