இயக்குனர் ஷங்கரை பிரமாண்ட படம் தருபவர் என்பதையும் தாண்டி... பிரமாண்டமான பரபரப்பையும் ஏற்படுத்தும் இயக்குனர் என்று சொல்லலாம். |
எந்திரனுக்கு பிறகு இந்தியாவின் நம்பர்.1 இயக்குனர்களில் ஒருவர் என்ற புகழினை அடைந்துவிட்ட ஷங்கர், எந்திரனின் பிரமிப்பு கண்டு பாலிவுட் திரையுலகமே வியந்து போயிருக்கும் இந்தத் தருணத்தை பயன்படுத்தி தனது ‘பாய்ஸ்’ படத்தை டப் செய்து இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். “பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற திரி இடியட்ஸை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்கிறார்” என்ற தகவல் உண்மையா? பொய்யா? என்பதே தெரியாத அளவிற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைவட்டாரத்திலும் பல மாதமாக உலா வந்துகொண்டிருக்கிறது. திரி இடியட்ஸில் நடிக்கவிருப்பவர்கள் என்ற கணிப்பு மட்டுமே விஜய், சிம்பு, சித்தார்த், மாதவன், மகேஷ்பாபு, ஜீவா என வளர்ந்து கொண்டே வந்தது. இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம். இந்த நிலையில் ஒரு பாடல் தயாராகிவருகிறது என மேலும் ஒரு வதந்தியும் தீயாய் பரவி வருகிறது. இப்படி ‘ஷங்கர் - திரி இடியட்ஸ்’ கதை இழுபறியாகவே இருக்கும் நிலையில் இன்னொரு சட்டச் சிக்களுக்கும் ஆளகியுள்ளார் ஷங்கர். பத்துவருட கனவு என எந்திரனை ஷங்கர் கூறிவந்தார். ஆனால் ‘எந்திரன் ஷங்கரின் லட்சியக் கனவு அல்ல... அது அவரின் களவாடிய கனவு’ என ஒன்றுக்கு இரண்டு எழுத்தாளர்களின் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ‘எனது கதையை அப்படியே கொண்டு படமாக்கியுள்ளார்’ என கவிஞரும், எழுத்தாளருமான ஆருர் தமிழ்நாடன் வழக்கு தொடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆர்னிகா நாசர், ‘எனது கதையில் வரும் சம்பவங்கள் பல, எந்திரனில் அப்படியே காட்சியாக்கப்பட்டுள்ளன’என குற்றம் சாட்டியுள்ளார். இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது எழுத்தாளர்கள் இருவரும் தொடுத்துள்ள இந்த வழக்குகள்தான் இன்றைய சினிமா வட்டாரத்தின் ஹைலைட் பரபரப்பு. இப்படியான நிலையில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ இந்தியில் டப் செய்து வெளியிடப்படவிருப்பதாகவும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. “பாய்ஸ்” தமிழில் வெளியானபோது, இந்தியில் ‘ரீமேக்’கோ, ‘ட்ப்’போ செய்து வெளியிடப்படவில்லை. தற்பொழுது 'எந்திரன்' வெற்றியைத் பயன்படுத்தி, 'பாய்ஸ்' படத்தை இந்தியில் 'டப்' செய்து வெளியிட இருக்கிறாராம் ஷங்கர். இன்று பாலிவுட்டில் ஷங்கருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை போலவே ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகன் சித்தார்த்தும், கதாநாயகி ஜெனிலியாவும் பாலிவுட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.இவைபோக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இந்தியில் நல்லமதிப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக கூட்டிக்கழித்து பாய்ஸ் தமிழில் பெறாத வெற்றியை, வசூலை இந்தியில் பெறும் என கணக்கு போட்டுள்ளாராம் ஷங்கர். ‘பாய்ஸ்’ படத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸுக்கு இந்தப் படம் நஷ்டத்தையும் கஷ்டத்தையும்தான் கொடுத்தது. இந்தியில் இப்படத்தை வெளியிட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் நம்பிக்கையுடன் ஸ்ரீ சூர்யா மூவிஸும் உள்ளதாம்.(பாவம்... சூர்யா மூவிஸ் ‘பாய்ஸ்’சுக்கு பிறகு பாய் விரித்தே படுத்திருச்சு எனலாம்) இந்திப் பதிப்பின் பாடல்கள் மற்றும் வசனங்களை அப்பாஸ் டையர்வாலா எழுதவுள்ளாராம். பாய்ஸ் இந்தியில் வெளியாகும் இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என சித்தார்த் கூறியிருப்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.. இதுகுறித்து சித்தார்த், “பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன். யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேன் ஒத்தன்டனா (தெலுங்கு சம்திங் சம்திங் - உனக்கும் எனக்கும்) படத்தைத்தான் கூற விரும்புறேன்” என தடாலடியாக சொல்லியிருக்கிறாராம் சித்தார்த். எது எப்படியோ... ஷங்கரின் சமயோஜித திட்டத்தில் ‘பாய்ஸ்’ பாலிவுட்டுக்கு ஹாய் சொல்ல ரெடியாகிடுச்சுங்கோ... |
Wednesday, 3 November 2010
ஷங்கரின் அடுத்த சூப்பர் பிளான்
Sudharsan SR
00:38:00
Post a Comment