Friday, 21 January 2011

Sudharsan SR

ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் அஜித் - அதிரடி முடிவு

 



        தான் ரசிக்கும் தன் தலைவரின் படம் ரிலீஸ் ஆகும் பொழுது பேனர் கட்டி, அதற்கு பாலாபிஷேகம் செய்து பூக்கள் தூவி கொண்டாடுகிற ரசிகனின் அதிகபட்ச ஆசை அவன் ரசிக்கிற நடிகரை நேரில் பார்த்து அவரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. இதை புரிந்து கொண்டு பல நடிகர்கள் தன் ரசிகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
 

சில காலத்துக்கு முன்பு மாதம் ஒரு முறை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமாக ரசிகர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்தார் ரஜினி. இதை எப்போதாவது செய்யும் கமல், என்னுடன் எடுத்தப் போட்டோவை இலவசமாக கருதிவிட வேண்டாம். அதற்கான ரூபாவை நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதை உங்களுக்கு தெரிந்த ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் என்று சமூக அக்கறையை தன் ரசிகனுக்கு காட்டினார்.

தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்வதோடு நின்றுவிடாமல், தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான் என புரிந்து கொண்ட விஜய், அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதையும், தான் எடுக்கும் முடிவுகளை ரசிகர்களோடு ஆலோசிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். 


ஆனால் அஜீத்தின் பாலிசியே வேறு. என்னைக் கொண்டாட வேண்டாம். என்னுடைய படத்தைப் பாருங்கள், ஆனால் சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்களுக்கு பல பொறுப்புகள் இருக்கிறது. முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பல முறை தன் ரசிகர்களுக்கு பாசத்துடன் சொல்லிப் பார்த்தார் அஜீத். யாரு கேட்டா? ரசிகர்களை அஜீத் சந்திப்பதில்லை என்று அவர் ரசிகர்கள் பெரிய போராட்டமே நடத்தினார்கள்.(இதெல்லாம் நாட்டில் நடந்ததுப்பா! )


மங்கத்தாவின் படபிடிப்பில் இப்போது படு பிஸியாக இருந்து வரும் அஜீத். படம் முடிந்தவுடன் தன் ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம். பில்லா படத்தின் மூலமாக தன் தொடர் தோல்விகளை எட்டி உதைத்து முன்னுக்கு வந்தார் அஜீத். அதன் பிறகு ஏகன், அசல் என மீண்டும் தோல்விகள் அவரைத் தட்டிப் பார்த்தன. இப்போது மங்காத்தாவில் வெற்றி நிச்சயம் என புறப்பட்டு இருக்கிறது மங்காத்தா டீம். வெங்கட் பிரபு இயக்கம், யுவன் இசை, தயாநிதி அழகிரி தயாரிப்பு என மே 1ஆம் தேதி வெளிவருகிறது மங்காத்தா.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, பத்திரிகை சந்திப்பிலும் வாய்திறக்க மாட்டேன், பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் பங்கேற்க மாட்டேன் என்று இருந்து வந்த அஜீத், மங்காத்தா படம் வெளியாவதற்குள் மாவட்டம் மாவட்டமாக தன் ரசிகர்களை சந்திக்க முடிவெடுத்திருப்பது அவர் ரசிகர்களுக்கு ஜாலியோ ஜாலி.