Monday, 6 December 2010

Sudharsan SR

3 இடியட்ஸிலிருந்து விலகினார் விஜய்? பரபரப்பு தகவல்

 

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய் விலகிவிட்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே. 

தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம். 

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சம்பளப் பிரச்சினை, மூன்று ஹீரோக்கள் சப்ஜெக்ட் போன்றவை விஜய்யை மீண்டும் தயங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஜெமினி நிறுவனம் இதில் மிகவும் அப்செட்டாகி உள்ளதாகவும், அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் புதிய ஹீரோவை ஷங்கர் தேட ஆரம்பித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.