அஜீத் நடிக்கும் மங்காத்தா படம் கைவிடப்பட்டதாக வந்த செய்திகள் பதற வைப்பதாகவும், இதில் உண்மை ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அஜீத், திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மங்காத்தா. வெங்கட்பிரபு இயக்குகிறார். இது அஜீத்தின் 50-வது படம். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பண பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் படத்தை கைவிட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்ட போது, “மங்காத்தா படம் கை விடப்பட்டதாக வெளியான செய்தி என்னை மிகவும் பதற வைத்தது. படப்பிடிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் சுமூகமாக இருக்கும் நிலையில் இப்படியொரு பிரச்சினையை கற்பனையாக கிளப்பியுள்ளது சங்கடப்படுத்துகிறது. பாங்காக்கில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.
சென்னையில் தற்போது மும்பை தாராவி போன்ற செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மழையால் அரங்கு சேதமாகி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்தோம். வசன காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டு விட்டன.
எதற்காக இந்த மாதிரி செய்திகள் பரவுகின்றன என்றே புரியவில்லை”, என்றார்.