Saturday 1 May 2010

Sudharsan SR

சுறா' –விமர்சனம்

 



பத்து பக்கம் பஞ்ச் டயலாக், அஞ்சு பாட்டு, அஞ்சு ஃபைட்டு, தொட்டுக்க ஒரு நாயகி, துரத்தி அடிக்க ஒரு வில்லன். இந்த ஃபார்முலா இருந்தா போதும். எந்த இயக்குனருக்கும் எப்படியும் கிடைத்துவிடும் விஜய்யின் கால்ஷீட்.
கதையிலோ காட்சி அமைப்பிலோ துளியளவும் வித்தியாசம் காட்டக்கூடாது என்ற விஜய்யின் கொள்கைக்கு வளைந்து கொடுத்து  'சுறா'வை வளர்த்திருக்கும் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார் ஆடியன்ஸை மட்டும் பட்டினி போட்டுள்ளார். சரி அவர் என்ன செய்வார் பாவம்!
மீனவ குப்பத்து மக்களுக்கு மழையில் நனையாத, வெய்யிலில் தீ பிடிக்காத வீடு கட்டி தரணும் என்பதுதான் விஜய்யின் லட்சியம். இதற்காக கண்களில் கவலையை தேக்கி வைத்தபடி கடற்கரையில் அலைந்து கொண்டிருக்கிறார் சுறா. டைட்டில் மட்டுமல்ல விஜய்யின் கேரக்டர் பெயரும் இதுதான்.குப்பத்து மக்களோ இவரை குலதெய்வமாகவே நினைக்கின்றனர்.
இப்படியே போனா இன்னும் படம் போரடித்து விடும் என்பது எல்லாருக்கும் தெரியுற மாதிரியே எல்லாருக்கும் தெரிந்த மாதிரியான திரைக்கதைக்கு அக்ஸிலேட்டரை முறுக்கினால், அடுத்த சீனில் வில்லன் கிராஸ் ஆக தொடங்குகிறார். கடத்தல் தொழில் செய்தே மந்திரியாகும் தேவ்கில், விஜய் இருக்கும் யாழ் குப்பத்திற்கு வலை வீசுகிறார். குப்பத்தை அப்புறப்படுத்தி அதில் தீம் பார்க் அமைப்பதுதான் அமைச்சரின் ஆசை. இதில் பற்ற ஆரம்பிக்கிறது விஜய்க்கும் அமைச்சருக்குமான பகை. இந்த போராட்டத்தில் ஹீரோவுக்குதான் ஜெயம் கிடைக்கும் என்பது சின்ன பிள்ளைக்கும் தெரிந்த கதைதானே? க்ளைமாக்ஸில் அதனை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர்.
ஒரே ஒருதடவை மட்டும் கட்டுமரம் ஏறும் கதாநாயகன்தான் குப்பத்து மக்களின் வாழ்க்கைக்காக போராடுகிறான் என்ற  'லாஜிக் மீறாத'  சுறா கேரக்டரில் ஆரம்பத்திலேயே காமெடி பீஸாகிவிடுகிறார் விஜய்.  "எத்தனை கோடி கொடுத்தாலும் சரி என்னை விலைக்கு வாங்கமுடியாது" , என்ற டயலாக்கில் காங்கிரஸ் பேரத்தை கடைவிரித்திருக்கிறார்.
உங்கிட்ட பணம் இருக்கலாம், பதவி இருக்கலாம், ஆள் இருக்கலாம், அதிகாரம் இருக்கலாம். ஆனா எங்கிட்ட நேர்மை  இருக்கு, உண்மை இருக்கு. அதுக்கு மேல என்னை உயிருக்கும் மேலா நினைக்கிற உள்ளங்கள் இருக்கு" என்ற டயலாக்கில் வருங்கால அரசியல் பிரவேசத்திற்கு வலை வீசுகிறார். இப்படி காட்சிக்கு காட்சி விஜய் பேசும் வசனங்களே அவரது நிஜ வாழ்க்கைக்கான ஆசைகளை  அடையாளம் காட்டுகிறது.
"இவன் தன்னை தலைவனா சொல்லிக்கிறது இல்லை; இவனதான் இந்த மக்கள் தலைவனா நினைச்சுகிட்டு இருக்காங்க' என்று மற்ற கேரக்டர் வழியாகவும் கொள்கை தீபம் ஏற்றப்படுவதால் ஒரு கட்டத்தில் எரிச்சலே மிச்சமாகிவிடுகிறது.
திடீரென மும்பை போய் நூறு கோடி சம்பாதிப்பதும் அதன்பின் வெயிலில்கூட கறுப்பு கோட்டு போட்டுக்கொண்டு வெட்டி ஸ்டைல் காட்டும்போதும் கேண்டினுக்கு சென்று காபி வாங்குமளவிற்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. வில்லன்களிடம் பேசும்போதும், கோர்ட்டில் தனது தரப்பை எடுத்துச்சொல்லும்போதும் விஜய்யின் காமெடியை ரசிக்கலாம்.
தமன்னா ஏரியா பக்கமாவது ஜாலியா இருக்கும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு அவரும் தருவது ஏமாற்றம்தான். விஜயின் தோள் சாய்ந்து டூயட் ஆட மட்டும் பயன்பட்டுள்ளார். திடீரென முளைக்கும் காதலில்  கெமிஸ்ட்ரியும் இல்லை ஹிஸ்ட்ரியும் இல்லை. பாசி படிந்த பாறையில் பட்டி பார்ப்பதுபோல கதையில் ஒட்டாமல் வழுக்குகிறது தமன்னா கேரக்டர்.
வைகைப்புயல் வடிவேலுவின் ஏரியாவிலும் வறட்சிதான் நிலவுகிறது. போலி போலீஸிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் சீன் உள்ளிட்ட சில காட்சிகளில் மட்டும் காமெடி.
வில்லனாக அறிமுகமாகியுள்ள தேவ்கில் கேரக்டர் நம்மையும் 'kill'கிறது. மணிசர்மாவின் இசையில்  'சூ மந்திரகாளி...' உள்ளிட்ட இரண்டு பாடல்கள் விசிலடித்தான் குஞ்சுகளை ஆட்டம் போடவைக்கிறது. வெளிநாட்டில் படமாக்கப்பட்ட  பாடலில் விஜய்யின் நடனம் பிரமாதம். இதற்கு மாஸ்டராக உழைத்த ராபர்ட்டை பாராட்டலாம். ஏகாம்பரத்தின் கேமிராவில் தண்ணி தெளித்திருந்தாலாவது பிரஷ்ஷாக இருந்திருக்கும்போல.அந்த அளவிற்கு ஒளிப்பதிவில் ரொம்ப டல்.
'அந்த பையன் கண்ணுல தெரியுற நெருப்பு கடலையே பத்த வச்சிடும்போல...' என கலக்டரைகூட டயலாக் பேச வைத்திருப்பதை தவிர இயக்குனரிடம் பெரிய க்ரியேட்டிவ் தெரியவில்லை.










Source : http://ozeeya.com/ta/tamilmovie-reviews/484-suraSource'சுறா' சுண்டெலி