Wednesday 22 December 2010

Sudharsan SR

தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!

 



தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து “பகலவன்” படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க-காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் சீமானும் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கைகுலுக்கத் துடிக்கும் விஜய்யும் இணையவிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் பல மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையவிருக்கிறார் என்ற வதந்தி பரவியதால் ஈழத் தமிழர்களின் அதிருப்திக்கு ஆளானார் விஜய். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. தற்போது சீமான் இயக்கத்தின் நடிப்பதன் மூலமாக ஈழத் தமிழர்களின் ஆதரவை பெற முயல்கிறார் என்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சீமானிடம் நாம் கேட்டபோது  :
வாழ்த்துக்கள் படத்தை நான் எடுத்துக் கொண்டிருந்தபோது… அண்ணன் தாணு தயாரிப்பில் “கோபம்” என்கிற படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். முழுக்க முழுக்க இப்படத்தை புதுமுகங்களை வைத்தே எடுப்பதாக தீர்மானித்திருந்தோம். இதுபற்றி நாங்கள் விவாதித் துக் கொண்டிருந்தபோது, “பகலவன்” படத்தின் கருவையும் அண்ணன் தாணுவிடம் விவரித்தேன்.
“கற்றவை… பற்றவை… தீயவை… தீ வை” இதுதான் பகலவனின் கரு. இது அண்ணன் தாணுவை ரொம்பவே உலுக்கி விட்டது. இதனை தம்பி விஜய்யை வைத்து எடுத்தால் சரியாக இருக்கும் என்றார் அண்ணன் தாணு. அதன்பிறகு இதை மறந்து போனோம். ஒருநாள் என்னை தொடர்பு கொண்ட தாணு, “எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் பகலவன் பற்றிச் சொல்லியிருக்கிறேன். உன்னை வரச் சொல்லியிருக்கிறார். போய் பார்” என்றார். அதன்படி எஸ்.ஏ. சி.யையும் தம்பி விஜய்யையும் சந்தித்தேன். கதையை சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது அவர்களுக்கு.
அப்போது விஜய், “காவலன், வேலாயுதம், 3 இடியட்ஸ் என மூணு படம் இருக்கு. அதை முடிச்சிட்டு பண்ணலாமா?… அண்ணன் அதுவரை காத்திருக்க முடியுமா?” என்றார். சரி என்று கூறிவிட்டு வந்தேன். அதன்பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றதால், நானும் தம்பி விஜய்யும் இணையும் பட வேலைகள் குறித்து எதுவும் விவாதிக்க முடியவில்லை. தற்போது விடுதலையாகிவிட்டதால், அன்று பேசியவைகளை நடைமுறைப்படுத்தும் பணிகள் இப்போது துவங்கியிருக்கிறது.
என்னுடைய கதைக்கு விஜய்தான் பொருத்தமானவர் என்பதால்… எமக்கான கதை இதுதான் என்பதால் விஜய்யோடு இணைகிறோமே தவிர, இதில் வேறு எந்த பின்னணியோ மர்மமோ சதியோ எதுவும் இல்லை என்கிறார் சீமான்.
தொடர்ந்து நம்மிடம் பேசியவர், “ஈழத் தமிழினத்திற்கு எதிரான சிந்தனையில் அவர் இயங்கினாலோ அரசியல் செய்தாலோ அதை முதலில் கண்டிப்பவனும் எதிர்ப்பவனும் நான் தான். ஆனால், விஜய் அப்படிப்பட்டவர் அல்ல. ஈழத்தமிழினத்தின் மீது எனக்கும் உங்களுக்கும் எந்தளவுக்கு பற்றுதலும் அக்கறையும் இருக்கிறதோ அதில் கொஞ்சம் கூட குறையாமல் விஜய்க்கும் இருக்கிறது.

தமிழ்த் தேசிய சிந்தனைகளுக்கு எதிராக அவர் எங்குமே இயங்கியதில்லை… இயங்கவும் மாட்டார். காங்கிரஸில் இணையப் போகிறேன் என்றோ… சோனியாதான் என் தலைவி என்றோ… காங்கிரஸ் தலைவர்கள்தான் நல்லவர்கள் என்றோ… எங்குமே விஜய் சொன்னதில்லை. ராகுலை சந்தித்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அவரது சிந்தனைகளை எடை போடக்கூடாது. அப்படியிருக்க, காங்கிரஸ் ஆதரவாளனா விஜய்யை சித்தரிக்க முயல்வது எப்படி சரியாகும்?அப்படி ஒரு சதி அல்லது பழி அவர் மீது விழுமாயின் அதை போக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. ஏனெனில், தம்பி விஜய் ஒரு தமிழன். அதனால், நாங்கள் இணைவது யதார்த்தமே தவிர… அரசியல் அல்ல என்றார்.
மேலும் சீமானிடம் “அரசியலில் இறங்க விஜய் தீர்மானித்திருக்கிறார். நீங்கள் இயக்கும் இந்தப் படம் அவரது அரசியலுக்கு உதவி புரியுமா?” என்றதற்கு, “தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிகழ்வதை விட அரசியல் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அது தற்போதைய தேவையாக இருக்கிறது.
அந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சியாளர்களாக நாம் தமிழர் இயக்கத்தினர் இருக்கிறார்கள். அந்த சிந்தனைதான் விஜய்க்கும் இருப்பதாக அறிந்தேன். அந்த வகையில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன் நான். நாங்கள் இணையும் இந்தப் படம் அவரது அரசியல் வெற்றிக்கு உதவுமா என்பது படப்பிடிப்புக்கு நாங்கள் செல்லும்போது புரியும்” என்கிறார் சீமான்.