காவலன் வருதோ இல்லையோ இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து அடுத்த படத்தில் இறங்கி விட்டார் விஜய். காவலன் ஷூட்டிங் முடிந்ததும் 'வேலாயுதம்' படத்தில் நடிப்பதாக இருந்த விஜய் காவலன் களேபரத்தில் 'வேலாயுதம்' படத்தை தள்ளி வைத்தார். 'வேலாயுதம்' படத்தை முடித்துவிட்டால் சீமானின் 'கோபம்' படத்தில் நடிக்க சரியாக இருக்கும் என யோசித்து வந்தார்.
ஆனால் இப்போது சீமானும் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். விஜய்க்கு சீமானின் கதை பிடித்துவிட்டது. சீமானும் இந்தக் கதைக்கு விஜய் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறார். படத்தை தயாரிக்க தாணுவும் தயாராக உள்ளார். இன்னும் என்ன வேண்டும் படத்தை துவங்க வேண்டியது தான். இந்த நேரத்தில் சீமானுக்கு நிறைய கோபங்கள் இருக்கிறது, காவலன் விஷயத்தில் விஜய்க்கும் நிறைய கோபம். இதுதான் இணைய சரியான நேரம் என்று இருவரும் நினைக்கிறார்கள்.
விஜய் ராகுலை சென்று சந்தித்தார், பின் அசின் விவகாரம் என விஜய் மீது உலகத் தமிழர்களுக்கு கோபம் இருக்கிறது. இப்போது நீங்கள் விஜய்யோடு இணைவது சரியாக இருக்குமா என்று சீமானிடம் கேட்டதற்கு, விஜய் ராகுலை சந்தித்தார் அவ்வளவுதான். மற்றபடி உலகத் தமிழர்களுக்கு எதிராகவோ ஈழத்துக்கு எதிராகவோ தம்பி விஜய் ஏதும் செயல்படவில்லை என்று நான் நினைக்கிறேன் அப்படி செயல்பட்டால் அவர் மீது எனக்கும் கோபம் வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் கோபம் சினிமாவில் மட்டுமில்லை அரசியலாகவும் வெடிக்க இருக்கிற நிலையில் திருச்சியில் தன் மக்கள் இயக்கத்தின் முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார் விஜய். அடுத்த வருடம் பொங்கல் கழித்து நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் தன் அரசியல் பிரவேசத்தைப் பற்றி வெளிப்படையாக பேச இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தின் ரசிகர் மன்றத் தலைவர்களை தனித் தனியாக சந்தித்து வருகிறார் விஜய்.
இப்போதைக்கு சீமானுடன் சேர்ந்து திரையில் கோபப்பட இருக்கிறார் விஜய். அதைத் தொடர்ந்து அமீரும் விஜயுடன் சேர்ந்து படம் பண்ண இருக்கிறார். இது தான் விஜய் பிளான். ஆனால் அதற்குள்ளாக என்ன நடக்குமோ ? நல்லது நடந்தா சரி...