Friday, 24 December 2010

Sudharsan SR

அரசியலுக்கு வரவேண்டும் - - அஜித்துக்கு ரசிகர்கள் நெருக்கடி

 


அரசியலில் குதிக்க  நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் டெல்லி சென்ற விஜய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப் போவதாக செய்தி பரவியது. பின்னர் அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.

கடந்த மாதத்தில், சென்னை வடபழனியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். தனிக்கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் சேர்வதா என்பது பற்றியும், ரசிகர் பலத்தை காட்டுவதற்காக பொங்கலுக்கு பிறகு திருச்சியில் மாநாடு நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது மகன் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சார வேலைகளை தொடங்கி விட்டார். ரகசிய சந்திப்புகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். பரபரப்பான இச்சூழலில், அரசியலில் குதிக்குமாறு அஜீத்குமாரையும் அவரது ரசிகர்கள் நிர்பந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆங்காங்கே ரகசிய கூட்டம் நடத்திய ரசிகர்கள் தங்களது விருப்பத்தை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பல்வேறு மன்றங்களை சேர்ந்தவர்கள் அஜீத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இதுபற்றி கூறினர். இது மன்றத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அஜீத் கூறியிருப்பதாவது :
எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கணிப்பிற்கு மாறாக தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையை மீறி சுய விளம்பரத்துக்காக சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நான் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.

எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன். இனிமேல் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பொது மக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு அஜீத் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த திடீர் எச்சரிக்கை, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி அஜீத் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் இன்று கூறியது :
இரண்டு, மூன்று மாதங்களாகவே ரசிகர்கள் சிலர் அஜீத் பெயர், நன்மதிப்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர். “விஜய் அரசியலுக்கு வருகிறார்; நம்ம ‘தல’ எப்போது அரசியலுக்கு வருகிறார்… யாருடன் கூட்டணி பேசப் போகிறார்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நச்சரிக்கின்றனர். அஜீத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள மன்றங்களுக்கு போன் செய்து, “ஞாயிற்றுகிழமை அங்கே கூட்டம் நடக்கிறது… அஜீத் வருகிறார்… ஏற்பாடுகளை செய்யுங்கள்…” என்று புரளி கிளப்பி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

இதபோன்ற செயல்கள் அவரது மனதை புண்படுத்தி இருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவும், மக்களுக்கு எந்த இடையூறும் ரசிகர்களால் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இப்படியொரு அறிக்கையை அஜீத் வெளியிட வேண்டியதாகி விட்டது. சென்னை, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் இன்று காலை அவசர கூட்டம் போட்டு அஜீத்தின் கட்டளைப்படி நடப்பதாகவும், அவரது விருப்பத்துக்கு மாறாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.