Wednesday, 29 December 2010

Sudharsan SR

காவலன் கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!

 

விஜய் நடித்த காவலன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இன்னும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விஜய்க்கு ரெட் போட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
இப்படத்தை வாங்கியுள்ள இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழகமெங்கும் பொங்கலுக்கு 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் இது வரை 70 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அவையும் கூட சுமாரான தியேட்டர்கள்தான் என்கிறார்கள்.
தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கும் விஜய்க்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணம் என்கின்றனர். விஜய்யின் முந்தைய படங்களில் சில தோல்வி அடைந்ததால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர் சங்கத்தினர் வற்புறுத்தினர். ஆனால் நடிகர் சங்கம் இதை ஏற்கவில்லை. இரு தரப்புக்கும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதில் முடிவு எட்டப்படவில்லை. சுறா படத்தின் நஷ்டத்தில் 35 சதவீதத்தை விஜய் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் படத்தின் நஷ்டத்தில் நடிகர்கள் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார் விஜய்.
காவலன் படத்தை கடந்த 17-ந் தேதி ரிலீஸ் செய்யத்தான் முதலில் ஏற்பாடாகி இருந்தது. பின்னர் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. நஷ்டஈடு வழங்காததால் காவலன் படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.
பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை போன்ற படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இவற்றுக்கு தாராளமாக தியேட்டர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.