ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கும், வீரம் படம் பொங்கலுக்கும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா-2 படத்திற்கு பின் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தலைப்பே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடியும் தருவாயில்தான் படத்தின் தலைப்பு ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரம்பம் தலைப்பு அறிவிக்கபட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்தது. இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், ‘ஆரம்பம்’ அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும், படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதி கட்ட வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மிகப் பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீடு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு ரத்னம் கூறியுள்ளார்.
இதற்கிடையே அஜீத், தனது அடுத்த படமான வீரம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். இப்படம் ஆரம்பிக்கும் போதே பொங்கல் விருந்தாக வீரம் இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆக, தீபாவளிக்கு ‘ஆரம்பம்’... பொங்கலுக்கு ‘வீரம்’...! மொத்தத்தில், ரசிகர்களுக்கு தல தீபாவளி - தல பொங்கல் தான்!!
Source : www.tamil.yahoo.com