Wednesday 22 September 2010

Sudharsan SR

விஜய்யை தாக்கும் ஆர்யா?

 

நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இந்த பதிவுலகத்துக்கு வந்த நாள் முதல் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு வகையான மாற்றுப்பார்வையோடு அணுகவேண்டும் என்று நாம் தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன மாற்றுப்பார்வை என்று கேட்கிறீர்களா? என்னடா தப்பு கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்பதுதான். அந்த வகையில் சென்ற வாரம் இரண்டாவது முறையாக (எந்திரன் ட்ரெய்லர் பார்க்கும் காரணத்துக்காக) பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்க சென்றேன். முதல் தடவை என் குருட்டு பார்வையில் தட்டுப்படாத சில விஷயங்கள் தற்போது பார்த்த மாற்றுப்பார்வையில் சிக்கியது.




பார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், புனைவு என்கிற பெயரில் பல வக்கிரங்கள் மற்றும் ஆபாசங்கள் என படத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும்.... (அடடாடா... மாற்றுப்பார்வையாளருக்கே உரிய எழுத்து நடை வந்து விட்டது போலிருக்கே?) சில நாட்களுக்கு முன்னாள் இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விஷயமாக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது சம்பந்தமே இல்லாமல் விஜய் அவர்களை ஒரு டீவி நிகழ்ச்சியில் கலாய்த்தது மற்றும் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் கொதித்து எழுந்த பின்புதான் விஜயின் மாஸ்சை பார்த்து தமிழகமே மிரண்டது. சம்பந்தப்பட்ட டீவி சேனல் மன்னிப்பு தெரிவித்தாலும் விடாமல் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.


விஜய் ரசிகர்கள் யாரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்கவில்லையா? அல்லது கவனிக்க தவறி விட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஒரு மாற்றுப்பார்வையாளனின் கடமை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும் விஜய் அவர்களை சம்பந்தம் இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். முதலாவதாக படத்தில் சந்தானத்தின் சலூன் பெயர் தல-தளபதி. ஏன் தளபதி-தல என்று வைத்தால் குறைந்து போயி விடுவார்களா? தல – தளபதி சலூன் என்று பெயர் வைத்து விட்டு, போர்டில் மட்டுமே விஜய் படம் இருக்கும். சலூனில் திரும்பும் இடமெல்லாம் அஜித் படம்தான் ஒட்டப்பட்டிருக்கும். படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஆர்யாவின் தங்கையின் அறிமுகக்காட்சி. அதில் அவர் தங்கை தன் நண்பிகளிடம், “ஹேய் இப்ப இருக்குற தமிழ் ஹீரோக்களிலேயே அஜித்துக்குதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு பெர்சனாலிட்டி இருக்கு.” என்று சொல்வார். இதுவும் விஜய் டீவியில் ஒரு பெண் சொன்ன கருத்து போலத்தான். அஜித்துக்கு பெர்சனாலிட்டி இருக்கு என்று சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவருக்கு மட்டும்தான் இருக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவரது சமகால நடிகரான, விஜய் அவர்களுக்கு இல்லை என்று உள்நோக்கத்தோடே இந்த வசனத்தை அணுக வேண்டும்.


இன்னொரு காட்சியில் சந்தானம் ஆர்யா இருவரும் திரைப்படத்துக்கு செல்வார்கள். அந்த அரங்கில் வில்லு மற்றும் ஏகன் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அங்கிருக்கும் ரசிகர் கூட்டம், அஜித்தின் பேனருக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருப்பார்கள். விஜய் பேனர் அம்போவென இருக்கும். இது ஒரே நேரத்தில் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்தும் செயல். இதுவும் படத்தின் இயக்குனரான ராஜேஷின் காழ்புணர்ச்சியையே காட்டுகிறது. கடைசியில் இருவரும் எந்த படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் படம் ஓடிக்கொண்டிருக்கும் பகுதி நோக்கித்தான் செல்வார்கள். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி படத்திலும் அஜித் புகழ் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதே காட்சியில் அஜித்தின் ரசிகர்கள் ஸ்மார்ட்டாகவும், விஜய் ரசிகர் மொட்டை தலையுடனும் இருப்பார். உடனே சந்தானம் அவரிடம் உன் ஹேர்ஸ்டைல பார்த்தா ஜெய்சங்கர் ரசிகர்னு நெனச்சேன், நீ விஜய் ரசிகரா? என்று கேவலமாக கேட்பார். அதே போல வில்லு படத்தைப்பார்த்து சந்தானம், உங்க ஆள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று சொல்வார். இது வில்லு படம் தோல்வி அடைந்ததை குத்திக்காட்டுவதற்காக வேண்டுமென்றே வைக்கப்பட்ட வசனம். அஜித் ரசிகர்களிடம், உங்க அளவுக்கு அவுங்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) அறிவில்லை என்ற பொருள் படும்படி பேசுவார். 


படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அஜித்தின் அடிவருடியாகவே இருந்து விட்டு போகட்டும். அதற்காக ஊர்அறிந்த ஒரு மாஸ் நடிகரை கலாய்ப்பது கண்டனத்துக்குரியது. கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் என்கிற முறையில் என் கண்டனங்களை முதலில் பதிவு செய்கிறேன்.
இன்னும் பத்து படங்களை கூட தாண்டாத புது தயாரிப்பாளர் ஆர்யா அவர்களே, உங்களைப்போல பலபேரை சந்தித்து அவர்களை எல்லாம் புறந்தள்ளி, மேலே வந்தவர் எங்கள் தளபதி என்பதை மறவாதீர். இன்று நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் இளைய தளபதியின் தொண்டனாக என் கண்டனங்களை பதிவு பண்ணுகிறேன். அடுத்த படத்தின் தொடக்கத்தில் நீங்கள் மன்னிப்பு கோரினாலும் விடப்போவதில்லை. புறக்கணிப்போம் ஆர்யாவின் படங்களை...

டிஸ்க்:இந்த பதிவை  விஜய் அவர்களை கலாய்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே..